இந்தியக் கலாச்சாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி என்பது வெறும் ஆபரணங்கள் மட்டும் கிடையாது, அது ஒரு குடும்பத்தின் கௌரவம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தின் அடையாளமாகும். கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், 2026-ம் ஆண்டிலும் இந்த விலையேற்றம் தடையின்றித் தொடரும் என்றே சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர். நீங்கள் இந்த ஆண்டு தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்யவோ அல்லது நகைகளாக வாங்கவோ திட்டமிட்டிருந்தால், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் இரண்டு மிக முக்கிய விஷயங்களைக் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
முதலாவதாக, உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலகில் எங்காவது போர் உண்டானாலோ அல்லது பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலோ, முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளை விடப் பாதுகாப்பான முதலீடான தங்கத்தையே அதிகம் விரும்புவார்கள். தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தகைய உலகளாவிய பதற்றங்களால் தான் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது.இப்பொழுது இருக்கும் சரிவு ஒரு தாற்காலிகமாகவே இருந்தாலும், சர்வதேசத் தரகு நிறுவனமான யூ.பி.எஸ் (UBS) கணிப்புப்படி, 2026-ம் ஆண்டின் நடுப்பகுதியில் சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 6,200 டாலர்கள் வரை உயர வாய்ப்புள்ளது.
இரண்டாவதாக, முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் மற்றும் இந்திய மத்திய பட்ஜெட்டின் வரி விதிப்புகள் ஆகும். பொதுவாக அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து விலை உயரும். அதேபோல், இந்தியாவின் இறக்குமதி வரிகளும் உள்நாட்டுத் தங்க விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2026-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியில் செய்யப்பட்ட மாற்றங்கள், இந்தியச் சந்தையில் விலையை ஏற்றியும் இறக்கியும் விளையாடி வருகின்றன. எனவே, அரசு சார்ந்த வரிக் கொள்கைகள் மற்றும் செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் நன்கு ஆராய வேண்டும்.
தற்போது தங்கம் வாங்குவது லாபகரமானதா என்ற கேள்விக்கு, தங்கம் எப்போதும் நீண்ட கால நோக்கில் சிறந்த முதலீடு தான். ஆனால், தங்கம் ஒரு அவுன்ஸிற்கு 5,000 டாலர்களையும், வெள்ளி ஒரு கிலோவிற்கு 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயையும் தாண்டி விற்பனையாகும் இந்தச் சூழலில், அவசரப்பட்டு ஒட்டுமொத்தப் பணத்தையும் முதலீடு செய்யக் கூடாது. சந்தையில் விலை சற்று குறையும் வரை காத்திருந்து, சிறுகச் சிறுக வாங்குவதே புத்திசாலித்தனமான உத்தியாகும். குறிப்பாக, செய்கூலி மற்றும் சேதாரம் அதிகமுள்ள நகைகளாக வாங்குவதை விட, கோல்டு ஈடிஎஃப் (Gold ETF), அல்லது நாணயங்களாக வாங்குவது அதிக லாபத்தைத் தரும்.
