ஆந்திராவில் ஒரு KGF… இந்தியாவில் தங்கம் விலை குறையுமா? முழு விவரம் இதோ…

இந்தியா தங்க தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனால் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் வர்த்தக மோதல்கள் போன்றவை நேரடியாக இந்திய தங்க விலையையும் பாதிக்கின்றன. உலக சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், இந்தியாவில் நகை விலையிலும் பிரதிபலிக்கின்றன.

ஒருகாலத்தில் இந்தியா தங்க உற்பத்தியில் முன்னிலையில் இருந்தது. குறிப்பாக கோலார் தங்க சுரங்கம் மூலம் சீனா போன்ற நாடுகளுக்கு இணையாக தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் 1990களுக்கு பின்னர் அரசு மற்ற கனிம வளங்களுக்கு முன்னுரிமை அளித்ததால், தங்க சுரங்க ஆய்வுகள் குறைந்தன. இதன் விளைவாக கோலார் சுரங்கமும் மூடப்பட்டு, இந்தியா இறக்குமதியை சார்ந்த நாடாக மாறியது.

தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டின் பல பகுதிகளில் தங்க வளங்களை கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ஆந்திரப் பிரதேசத்தின் ஜொன்னகிரி பகுதியில் பெரிய அளவில் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை Geomysore Services என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனத்திற்கு தங்கம் தோண்டி எடுக்கும் உரிமை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுரங்கம் Hutti Gold Mines அடுத்து செயல்படும் முக்கிய தங்க திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் 600 கிலோ தங்கம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அடுத்த 15 ஆண்டுகளில் ஆண்டுக்கு 1000 கிலோ வரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், உள்நாட்டு தங்க உற்பத்தி அதிகரித்து இறக்குமதி குறையும். இதன் மூலம் தங்க விலை குறைய வாய்ப்பு இருப்பதுடன், ஆந்திர மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பெரும் ஆதாரமாக இருக்கும்.

Related News

Latest News