தங்கம் விலை ஏற்றம்: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!! காரணம் இதுவா?

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 2ஆவது நாளாக உயர்ந்து சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த சூழலில், அட்சய திருதியை பண்டிகை நெருங்கும் வேளையில் தங்கம் விலை உயர்வதால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மேலும், ஈரான் போர் தொடங்கியது முதல் தொடர் சரிவில் இருந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், நேற்றும் , இன்றும் தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. ஆபரண தங்கம் திங்கட்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிவடைந்து 14, 060 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று அதாவது, செவ்வாய்க்கிழமை ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்து 14,220 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை சரமாரியாக உயர்ந்திருக்கிறது.

அதாவது, இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் விலை உயர்ந்து 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 800 ரூபாய் விலை உயர்ந்து 1,14,560 ரூபாயாக உயந்திருக்கிறது.

சென்னையில் இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 360 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,880 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 109 ரூபாய் விலை உயர்ந்து 15,622 ரூபாய்க்கும் ஒரு சவரன் 872 ரூபாய் விலை உயர்வு கண்டு 1,24,974 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதற்கிடையே, ஈரான் போர் தொடர்பான இரண்டாம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை நடத்த போவதாகவும், இருதரப்பும் சமாதானத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதுமே தங்கம் வெள்ளி விலை உயர்வதற்கு காரணமாக கருதப்படுகிறது.

ஏனெனில் இந்த அறிவிப்புகள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சற்றே சரிவை சந்தித்திருக்கின்றன. இதனால் தங்கம், வெள்ளி விலைகள் உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் உயர தொடங்கி இருக்கின்றன.

மேலும், எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்வது மிக சிறந்தது.

Related News

Latest News