சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கரூர் எம்.பி. ஜோதிமணி பேசுகையில், “அதிமுகவை பொருத்தவரையில், அவர்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர். அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான். இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் இடையேயான தேர்தல் என்று முதல்வர் சொல்வது சரியே. ஏனென்றால், அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதிமுக கூட்டணி என்கிறார்.
பாஜகவின் வரலாறு என்னவென்றால், ஒரு மாநிலத்தில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து, அந்தக் கட்சியை கபளீகரம் செய்வதுடன், மாநிலத்தையும் அழித்து விடுவார்கள். தமிழ்நாட்டில் இந்தளவுக்கு அதிமுகவை முழுவதுமாக பாஜக கைப்பற்றிய சூழல் எப்போதும் இருந்ததில்லை.
விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடக்கியிருக்கிறார். அவர் ஒரு பிரபலமான நடிகரும்கூட. ஒருசில இளைஞர்களிடையே அவருக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் கிடைக்கும். ஆனால், இந்தியா கூட்டணிதான் பெரும்பான்மை பெற்று, வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தொங்கு சட்டப்பேரவை வராது” என்று தெரிவித்தார்.
