EPFO போர்டல் அப்டேட்… புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது… இது தான் அந்த காரணம்?

வருங்கால வைப்பு நிதி (PF) தொடர்பான சேவைகளை பெரும்பாலான சந்தாதாரர்கள் தற்போது EPFO போர்டல் மூலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக PF தொகையை திரும்பப் பெறுதல், முன்பணத்திற்கு விண்ணப்பித்தல், கணக்கு பரிமாற்றம் உள்ளிட்ட பல சேவைகள் இணையவழியில் எளிதாக வழங்கப்பட்டு வருகின்றன. பயனாளர்களுக்கு மேலும் வேகமான, பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்கும் நோக்கில், EPFO தனது கணினி மற்றும் மென்பொருள் அமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் மேம்பாட்டு பணிகளின் காரணமாக, இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை EPFO போர்டல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இந்த காலகட்டத்தில் புதிய PF Claim-கள் பதிவு செய்தல், PF முன்பணத்திற்கு விண்ணப்பித்தல், PF கணக்கு பரிமாற்றம் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என்று EPFO அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஏற்கனவே போர்டல் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள PF Claim-கள் அல்லது பிற விண்ணப்பங்கள் எந்தவிதத்திலும் ரத்து செய்யப்படமாட்டாது என்றும், அவை வழக்கமான நடைமுறையின்படி பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே விண்ணப்பித்துள்ள சந்தாதாரர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

போர்டல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பயனாளர்கள் தங்களது PF கணக்கு தொடர்பான தகவல்களை பெறவும், தேவையான உதவிகளைப் பெறவும் மாற்று வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, SMS சேவை, Missed Call சேவை (9966044425), உதவி எண் (14470) மற்றும் WhatsApp சேவை ஆகியவற்றின் மூலம் EPFO-வை தொடர்புகொள்ளலாம்.

மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்ததும், EPFO இணையவழிச் சேவைகள் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கும். புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் எதிர்காலத்தில் பயனாளர்களுக்கு இன்னும் விரைவான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற சேவைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News