LPG தட்டுப்பாடு தீர்ந்தது… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஈரான்–அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்ததால், வணிக பயன்பாட்டுக்கான கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.3,000-ஐ தாண்டியது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டன. சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடு மற்றும் தொடர் விலை உயர்வு காரணமாக தொழில் நடத்துவதே சவாலாக மாறியது.

இந்த நிலையில், ஹோட்டல் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைப் போலவே இனி தடையின்றி கமர்ஷியல் சிலிண்டர்கள் கிடைக்கும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர் காலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட எல்பிஜி விநியோகம் குறைக்கப்பட்டது. மேலும், எல்பிஜி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சி3 மற்றும் சி4 வாயுக்களை வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஹோட்டல்கள், தள்ளுவண்டி உணவுக் கடைகள் மற்றும் சிறு தொழில்கள் அதிக பாதிப்பை சந்தித்தன. சில ஹோட்டல்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி சமாளித்தாலும், அனைவராலும் அதைச் செய்ய முடியவில்லை.

தற்போது ஈரான்–அமெரிக்கா இடையேயான பதற்றம் குறைந்து, எரிவாயு விநியோகம் மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளதால் அரசு இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. தொழிற்சாலைகளுக்கு எல்பிஜி விநியோகம் மீண்டும் வழக்கம்போல வழங்கப்படும் என்றும், மாநில அரசுகள் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், பொதுமக்களுக்கு தேவையான அளவில் எல்பிஜி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது. கடந்த சில மாதங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.942-ஆகவும், 19 கிலோ கமர்ஷியல் சிலிண்டர் ரூ.3,113-ஆகவும் உயர்ந்த நிலையில், இனி விநியோகம் சீரானால் விலை குறையுமா என்பது சந்தையின் நிலவரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News