சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (ஜூன் 26) நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா காமராஜர் சாலையில் ‘Start Run, Stop Drugs’ என்ற கருப்பொருளில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். அங்கு திரண்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அந்த உறுதிமொழியை வழிமொழிந்து ஏற்று, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதி எடுத்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, போதைப்பொருளுக்கு எதிரான தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற கையெழுத்து பலகையில் முதல்வர் விஜய் முதல் கையெழுத்தை பதிவு செய்தார். பின்னர், விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், முதல் பங்கேற்பாளராக சில தூரம் ஓடியும் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசு உயர் அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாரத்தான், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
