தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்திக்க ஒவ்வொரு தொகுதியாக செல்ல தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்,சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. அவரது பிரச்சாரம் செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை மக்கள் சந்திக்கவுள்ளார். இந்த கூட்டங்கள் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் அதாவது, மொத்தம் 14 நாட்கள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற உள்ளது . ஒரு நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி,கடந்த செப்டம்பர் 13 அன்று திருச்சியில் தொடங்கிய முதல் பிரச்சார நிகழ்ச்சி பெரும் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியது. இந்த கூட்டம் ஒரு பக்கம் விஜய்யின் அரசியலுக்கு ஆதரவாக பார்க்கப்பட்டாலும் திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
அதாவது, காலை 10.30 மணிக்கு நடைபெற வேண்டிய முதல் கூட்டம் மாலை 3 மணிக்கு தான் நடைபெற்றது. இதனையடுத்து அரியலூரில் அடுத்த கூட்டத்திற்கு செல்லவே இரவு 8 மணி முதல் 9 மணியை தாண்டியது. இந்த கூட்டத்தில் பேசி முடிக்கவே இரவு 10 மணியை தாண்டியதால் பெரம்பலூர் பகுதியில் நடைபெற வேண்டிய கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் பகுதிக்கு வருவதாக விஜய் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் வருகிற 21 ஆம் தேதி விஜய் நாகை, மயிலாடு துறை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பொதுமக்களை சந்திக்கவுள்ளார். ஏற்கனவே திருச்சியில் விஜய்யின் பிரச்சாரத்தில் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இதனால் விஜய்யின் பிரச்சாரத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அந்த வகையில் விஜய் பிரச்சாரத்தின் போது அவரது வாகனத்தை தொண்டர்கள் பின்தொடர்ந்து வரக்கூடாது. போக்குவரத்தில் தடை ஏற்படக் கூடாது,
ரோடு ஷோவில் வாகனத்தின் மீது நின்று செயற்படக் கூடாது. உரையாற்றுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியில் மட்டுமே பேச வேண்டும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் பொதுமக்கள் சொத்துக்களுக்கு எந்தவிதமான சேதமும் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனைகளையும் விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் விஜய் ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையல் அதனை இரண்டு மாவட்டமாக குறைக்க தவெகவினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் காரைக்கால் வழியாக நாகை மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானா வரவுள்ளார். இந்த இடத்தில் கட்சியின் தொண்டர்கள் விஜய்க்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். இதையடுத்து, நாகூர் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் விஜய் பிரச்சார பேருந்து மூலம் பயணித்து புது ரவுண்டானா பகுதியை விஜய் செல்லவுள்ளார். மேலும், அங்கு மக்களை சந்தித்து பேசவுள்ளார். இதனையடுத்து திருவாரூர் பகுதியில் அடுத்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.
