ஆளுநரை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவிப்பு

274

ஆளுநரை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களில் தலையீடு போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.இதற்கிடையே, கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், விளக்கம் கேட்டும் ஆளுநர் ஆரிப் முகமது கான் நோட்டீஸ் அனுப்பியது கேரள அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்தநிலையில் பாலக்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராய் விஜயன், ஆளுநர் சர்வாதிகாரியை போல் நடந்து வருகிறார் என்றும், அவரது நடவடிக்கைகளை பார்க்கும் போது, கேரளாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது எனவும் தெரிவித்தார். எனவே, தேவைப்பட்டால் அவரை ஆளுநர் பதவியில் இருந்து திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.