2014-ம் ஆண்டு உட்கட்சி தேர்தலை நடத்திய அதிமுக, அதன் பிறகு 2019-ம் ஆண்டு உட்கட்சிப் பதவிகளுக்கான தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல், அதன் பிறகு கொரோனா பிரச்சனை என இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அதிமுக தலைமை கட்சித்தேர்தலை நடத்திமுடித்தது.
17 சார்பு அணிகளை கொண்ட அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் இந்தியாவின் மாபெரும் அரசியல் கட்சிகளில் ஒன்று. சமீபத்தில் 75 மாவட்டங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், 80 ஆயிரம் கிளைக்கழகங்கள் என அக்கட்சி நடத்தி முடித்த உட்கட்சி தேர்தலில் பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உட்கட்சி தேர்தல் முடிவுகளை கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த அதிமுக,அதன் தொடர்ச்சியாக ஜூலை 23-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தவுள்ளது.
இந்த கூட்டத்தை மையப்படுத்தி எழுந்துள்ள சர்ச்சைகள் அதிமுகவிற்கு புதிது ஒன்றும் அல்ல. 2019- ல் நடத்த நாடாளுமன்றத்தேர்தலின் போதே அதிமுகவின் ஒற்றைத்தலைமையாக மாறுகிறாரா எடப்பாடி பழனிச்சாமி என பத்திரிகைகளும் ஊடகங்களும் தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வந்த விஷயங்கள் தான்.
ஆனால்,அப்போதெல்லாம் அப்படி ஒரு கோரிக்கையே அதிமுகவில் இல்லை எனக்கூறிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த வாரம் நடந்த அதிமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்துள்ளது என போட்டுடைத்த தகவலே தமிழக அரசியலில் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.