முன்னாபாய் எம்பிபிஎஸ் பாணியில் தேர்வு எழுதிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

334
Advertisement

சஞ்சய் தத் நடித்து வெளிவந்த முன்னாபாய் எம்பிபிஎஸ் திரைப்படத்தை நினைவுகூரும் வகையில், மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் நகரிலுள்ள மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் இரண்டு மாணவர்கள் புளூ டூத்தைப் பயன்படுத்தித தேர்வு எழுதிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள மகாத்மா காந்தி மெமோரியல் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பின் கடைசி ஆண்டு தேர்வு சமீபத்தில் நடந்தது. அங்கே, மகாத்மா காந்தி மெமோரியல் மருத்துவக் கல்லூரி, அரவிந்தோ மருத்துவக் கல்லூரி மற்றும் சிந்து மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 80 மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்..

அப்போது தேர்வு அறைக்குள் பறக்கும் படை நுழைந்தது. அவர்களுக்கு 2 மாணவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியது. அருகே சென்று கவனித்தபோது இருவரும் புளூ டூத்தைப் பயன்படுத்தித் தேர்வு எழுதிக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். அவர்கள், மைக்ரோ சைஸ் புளூ டூத் கருவிகளைக் காதில் பொருத்தியிருந்தனர்.

அதனால், அவர்களிருவரும் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டு மேல்நடவடிக்கைக்கு வழிசெய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

முன்னாய் பாய் எம்பிபிஎஸ் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்த படமும் ஹிட்டானது.
கற்பனையாக கதையை உருவாக்கி எடுக்கப்பட்ட திரைப்படத்தை நிஜமாக்கியுள்ளனர் மாணவர்கள். இத்தகைய மாணவர்கள் மருத்துவராகி, சேவை செய்யத் தொடங்கினால் எப்படி இருக்கும்…?