முகக் கவசம் அணியாதவர்களுக்கு மயானத்தை சுற்றிக் காட்டிய நிர்வாகம்
விநோதமான கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை
கொரோனா பரவாமலிருக்க அனைவரும் கண்டிப்பாக
முகக் கவசம் அணியவேண்டும் என்பதை அரசும்
மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், சிலர் முகக் கவசம் அணியாமல் பொது
இடங்களில் திரிகின்றனர். காவல்துறை எச்சரித்தும்
அபராதம் விதித்தும் இத்தகையோர் திருந்தியபாடில்லை.
இந்த நிலையில் அருப்புக்கோட்டையில் தேவையின்றி
வெளியில் சுற்றியவர்களைப் பிடித்து கொரோனா
பரிசோதனைக்கு கொண்டுசென்ற பிறகே, அங்கு நடமாட்டம்
குறைந்தது.
அதேவேளை, முகக் கவசம் அணியாதவர்களைப் பிடித்து
ஆம்புலன்சில் ஏற்றி மயானத்தை சுற்றிக்காட்டி எச்சரித்துள்ளது
கோவை மாவட்டத்திலுள்ள அரசூர் ஊராட்சி நிர்வாகம்.
அரசூர் ஊராட்சியில் தினமும் 300க்கும் அதிகமானோர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உயிர்ப் பலியும் இங்கு அதிகமாக உள்ளது. இதனால்,
முகக் கவசம் அணியாதவர்களை ஊராட்சி நிர்வாகம்
கடுமையாக எச்சரித்தது.
ஆனாலும், தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடைகளுக்கு
முகக் கவசம் அணியாமல் சிலர் வந்திருந்தனர்.. உடனே
அவர்களைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றிய நகராட்சி
நிர்வாகத்தினர் அங்குள்ள மயானத்தை சுற்றிக் காட்டினர்.
கொரோனா தொற்றிக்கொண்டால் உயிர்ப் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் இல்லையென்பதையும், ஒருவேளை இறந்து
விட்டால் பிணத்தைப் புதைக்கக்கூட இல்லையென்பதையும்
எடுத்துக்கூறியது ஊராட்சி நிர்வாகம்.
இந்தப் புதுமையான விழிப்புணர்வு நடவடிக்கை நல்ல
பலன்களைக் கொடுத்துள்ளது- முகக் கவசம் அணியாமல்
வெளியில் செல்வோர் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துவிட்டது.