நியாயமா இது ? புதிய அணை கட்டத்துடிக்கும் கேரளா !
பினராயி விஜயனை புத்தக வெளியீட்டுக்கு அழைக்கும் தமிழக முதல்வர்..
கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதே ஒரே தீர்வு என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்கு 5 மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர்
அன்வர் பாலசிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
கேரளாவில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி நடந்த கவர்னர் உரையில்…
2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை நீதிபதியால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் இந்த கவர்னர், தனக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவரின் தலைமைப் பீடமாக விளங்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே புறந்தள்ளி இருப்பது அரசியல் சாசன விதி மீறலாகும்.
ஒரு மாநில அரசின் கொள்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தக் கட்சி தன் கொள்கை கோட்பாடுகளை அமல்படுத்துவதற்கு எந்த நிலைக்கும் செல்லலாம். மாநில நலன் என்கிற ஒற்றை வரியில் அதை முடித்து வைத்துவிடுவார்கள்.
ஆனால் கவர்னர் அந்த வட்டத்திற்கு உட்பட்டவரல்ல. அவருக்கென்று மரபுகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் அமலில் இருக்கிறது.
அதையெல்லாம் மீறி உச்சநீதிமன்றம் தெள்ளத்தெளிவாக ஒருமுறைக்கு இரண்டு முறை வழங்கிய தீர்ப்பையே, ஒரு கவர்னரின் உரை கேள்வி கேட்கும் என்றால் உடனடியாக திரும்பப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் கேரள மாநில கவர்னர் திரு ஆரிப் முகமது கான்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையைப் பலப்படுத்தி விட்டு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்பதுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை சாராம்சம்.
அந்த அடிப்படை தீர்ப்புக்கு எதிராக அணையினுடைய நீர்மட்டத்தை 136 அடியாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், அதுதான் கேரள மாநில மக்களுக்கு பாதுகாப்பானது என்றும், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவது தான் தீர்வு என்றும்,கேரள மாநில சட்டமன்றத்தில் கவர்னர் உரையாற்றி இருப்பது துரதிஷ்டவசமானது, எதேச்சதிகாரமானது.
முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழகத்தின் இறையாண்மையோடு தொடர்புடையது. அதைப் பற்றி கேள்வி எழுப்ப இந்த கவர்னருக்கு அல்ல எந்த கவர்னருக்கும் உரிமை கிடையாது.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தான்தோன்றித்தனமாக வெளிப்படுத்தியிருக்கும் கேரள மாநில கவர்னர் திரு ஆரிப் முகமது கான் அவர்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
கேரளத்து இடதுசாரிகள் தங்களுடைய நரித்தனத்தை கவர்னர் மூலமாக வெளிப்படுத்தி இருப்பதற்கு ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் கடுமையான கண்டனங்கள்.
தொடர்ந்து புதிய அணை என்கிற முழக்கத்தை கேரளா எழுப்புமானால், கேரளாவிற்கு பல்லாயிரக்கணக்கான லாரிகளில் தினசரி சென்று கொண்டிருக்கும் டன் கணக்கிலான உணவுப் பொருள்களையும் கனிம வளங்களையும் நிறுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும்.
கூடுதலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடைய கவனத்திற்கு…
வரும் பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி தாங்கள் எழுதியுள்ள சுயசரிதையான உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவிற்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும், முதல்வர் களையும் அழைத்திருக்கிறீர்கள்.
அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் கேரள மாநில முதல்வர் திரு பினராயி விஜயன் அவர்களை அழைப்பதை தவிர்க்க வேண்டுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் என்று தன்னுடைய அறிக்கையில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.