தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் 2வது மெகா தடுப்பூசி முகாமில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்த போதிலும், 3வது அலை பரவும் அபாயம் உள்ளதால், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக, ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று 2வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு செல்போன் வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களில், மூவரின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் வழங்கப்படும் என்று ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, திருவேற்காட்டில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர் போன்ற பரிசு பொருட்கள் குலுக்கல் முறையில் வழங்கிய நிலையில், இன்று நடைபெறவுள்ள முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு என்ற அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்