தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் உரையாற்றிய விஜய், தமக்கு வெற்றி வழங்கிய தமிழக மக்களுக்கும் தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்களுக்கும் உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்தார். “இப்படி ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத்த தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய விஜய், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பேசினார். “இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா, நண்பிகளுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் இது நடந்திருக்கிறது. உங்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லா நல்ல விடியல்களையும் உங்களுக்காக இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான். நம்பிக்கையுடன் இருங்கள்” என்று அவர் உறுதியளித்தார். இந்த பேச்சு அரங்கில் இருந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மேலும், கட்சித் தொண்டர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்த விஜய், “உங்களை நான் எப்படி மறப்பேன்? நீங்கள் தான் என் உயிர். தமிழக வெற்றிக் கழக தோழர்களே, உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் இல்லையென்றால் எதுவுமே இல்லை” என்று உருக்கமாக தெரிவித்தார்.
அதோடு, கட்சியின் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பணியாற்றிய “விர்ச்சுவல் வாரியர்ஸ்” அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகளை தெரிவித்தார். “வாங்க, எல்லோரும் சேர்ந்து ஒரு புதிய அரசை உருவாக்குவோம்” என்று அவர் அழைப்பு விடுத்தார். விஜயின் இந்த உணர்ச்சிபூர்வ உரை தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
