தூக்கத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட மனைவிமீது கணவன் போலீசில் புகார் அளித்த செயல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரூத் போர்ட். 47 வயதாகும் இந்தப் பெண்மணி நோயாளிகள் மற்றும் வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியைச் செய்துவருகிறார்.
சமீபகாலமாக விடுமுறைக்காலத்தின்போது மெக்ஸிகோவுக்குச் சென்று நிறைய செலவுசெய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மனைவியின் இந்தச் செயல் 61 வயதான கணவர் ஆன்டனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால், மனைவியைக் கண்காணிக்கத் தொடங்கினார். மனைவியின் கைப்பையில் புதிதாக ஒரு டெபிட் கார்டு இருப்பதைப் பார்த்ததும் அவருடைய பயம் அதிகரித்தது. இந்த நிலையில், ஒரு நாள் ரூத் தூக்கத்தில் ஏதேதோ உளறினாள்.
மறுநாள் காலையில் அதுபற்றிக் கணவர் கேட்டபோது, ஒரு பராமரிப்பு இல்லத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த, தான் கவனித்துக்கொண்டிருந்த நோய்வாய்ப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து 7 ஆயிரம் பவுண்டுகளுக்குமேல் திருடியதை ஒப்புக்கொண்டாள்.
அதைக்கேட்டு அதிர்ந்த ஆன்டனி உடனடியாக போலீசில் புகார் அளித்தார். அதன்பிறகு நீதிமன்றத்தில் ரூத்துக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
தனது மனைவியின் செயல் பற்றிக் கூறிய ஆன்டனி, மூன்று குழந்தைகளின் தந்தையான நான் எனது மனைவியின் செயலால் இதயம் உடைந்துவிட்டதுபோல உணர்ந்தேன். பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து அவள் திருடியது எனக்கு அருவறுப்பாக இருந்தது. அதனால்தான் அவள்மீது புகார் செய்தேன். இருந்தாலும் என் மனைவி ரூத்தை மிகவும் ஆழமாக நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆன்டனியின் நேர்மையைப் பாராட்டிய நீதிபதி, இந்த விஷயம் பத்திரிகைகளில் வெளியான பிறகு வருத்தமும் அவமானமும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.