தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா, தனது தனித்துவமான இசையாலும் கானா பாடல்களாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். 1950ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மாங்காடு கிராமத்தில் பிறந்த இவர், இளம் வயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டார். பாரம்பரிய இசையையும் மேற்கத்திய இசையையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தார்.
1986-ம் ஆண்டு வெளியான “மாட்டுக்கார மன்னாரு” என்ற படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளர் தேவா ‘சி. தேவா’ என்ற பெயரில் அறிமுகமானார். அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகராசா, வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். இவரது இசைத்திறனைப் பாராட்டி, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், “தேனிசைத் தென்றல்” என்ற பட்டத்தை வழங்கினார்.
ரஜினிகாந்தின் பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் உள்ளிட்ட திரைப்படங்களில் இடம்பெற்ற அதிரடியான பாடல்கள் தேவாவின் இசைப் பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தன. குறிப்பாக, ஆட்டோக்காரன், வந்தேன்டா பால்காரன், அதாண்டா இதாண்டா போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
விஜயின் நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், குஷி மற்றும் அஜித்தின் ஆசை, காதல் கோட்டை, வாலி உள்ளிட்ட படங்களிலும் தேவா தனது இசை முத்திரையைப் பதித்துள்ளார். விஜயைப் பாடகராக அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த தேவா, கானா பாடல்களுக்கு தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை உருவாக்கினார். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.
மக்களின் வாழ்வோடும் உணர்வுகளோடும் கலந்த அவரது பாடல்கள், தலைமுறைகள் கடந்தும் ஒலித்துக்கொண்டே இருக்கும். தமிழ் திரையிசை வரலாற்றில் தேவாவின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது.
