திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில், அவரது ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றி விழாவைத் தொடர்ந்து, சமந்தா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதனால், அவர் கடந்த காலத்தில் குழந்தை பிறப்பு குறித்து பேசியிருந்த சில பழைய நேர்காணல்கள் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த சமந்தா, 2018 ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். அப்போது, “நாங்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காலக்கெடுவையும், தேதியையும் கூட குறித்துவிட்டோம். ஆனால் வாழ்க்கை எப்போதும் திட்டமிட்டபடி நடக்காது. இருப்பினும், சைதன்யா நாம் நிர்ணயித்த தேதியிலேயே குழந்தை பிறக்கும் என்று மிகவும் நம்புகிறார்” என்று நகைச்சுவையுடன் கூறியிருந்தார்.
மேலும், குழந்தைகள் மீது தனக்கு இருக்கும் பாசத்தை வெளிப்படுத்திய சமந்தா, “எனக்கு குழந்தை பிறந்தால், அதுவே என் உலகமாக மாறிவிடும். ஆரம்ப ஆண்டுகளில் சினிமாவை விட என் குழந்தையுடன் நேரம் செலவிடுவதே முக்கியம். என் குழந்தைப் பருவத்தில் நான் இழந்த பல மகிழ்ச்சிகளை என் குழந்தைக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் நீலிமா குணா அளித்த ஒரு பேட்டியிலும், சமந்தா குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்ததை நினைவுகூர்ந்தார். 2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக சமந்தா தெரிவித்திருந்ததாக அவர் கூறினார்.
ஆனால் வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை. 2021 ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டார். சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து தனது வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறார். தற்போது அவரைச் சுற்றியுள்ள கர்ப்பம் தொடர்பான வதந்திகளுக்கு மத்தியில், குழந்தைகள் குறித்து அவர் பகிர்ந்திருந்த பழைய கருத்துக்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
