டாஸ்மாக் பாட்டிலுக்கு இனி ரூ.20 கூடுதலா? என்ன காரணம்?

தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் அரசுக்கு தினமும் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்படும் சுமார் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களது ஊதியத்தை சுமார் 25 சதவீதம் உயர்த்தி நிர்வாகம் அறிவித்ததாக கூறப்படுகிறது. கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் புதிய நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுபான விலையை உயர்த்தி அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் இல்லை என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மதுபான விலையை உயர்த்தும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்யும் இந்த மசோதா மூலம், மதுபான பாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக தீர்வை வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட மதுபானங்களின் விலை பாட்டிலுக்கு ரூ.20 வரை உயர வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலி மதுபான பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் சிக்கல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய வரி விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Related News

Latest News