தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய்க்கு எதிராக விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரி சங்கீதா வழக்கு தொடர்ந்திருந்ததாகத் தகவல் வெளியாகியது.
இந்த வழக்கு ஏற்கனவே மூன்று முறை விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் பிரபலங்கள் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களாலும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலாக, காணொளி காட்சி மூலம் விசாரணையில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதைக் காரணம் காட்டி, விசாரணையை மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்க விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சங்கீதா தரப்பில் இன்றே விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால், வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா முன்னிலையில் சங்கீதா காணொளி வாயிலாக ஆஜரானார். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக தனது தரப்பு விளக்கங்களை அவர் நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், வழக்கு தொடர்ந்து நடைபெற்றால் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் குடும்ப விவகாரம் தொடர்ந்து பேசப்படும் என்றும், அது குடும்பச் சூழலையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் சங்கீதா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப நலன் கருதி வழக்கைத் திரும்பப் பெறுவதாக சங்கீதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது கோரிக்கையைத் தொடர்ந்து, விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் முடித்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
