இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், மீனவ மக்களின் வாழ்வியலையும் பரபரப்பான படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், கடல் சார்ந்த காட்சிகள், வேகமான திரைக்கதை மற்றும் பின்னணி இசையால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான ‘மண்டாடி’ தற்போது 12-வது நாளை எட்டியுள்ளது. இரண்டாவது வார இறுதியில் இந்தியாவில் ரூ.88.32 கோடியும், வெளிநாடுகளில் ரூ.15.40 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உலகளவில் மொத்த வசூல் ரூ.103.72 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் சூரியின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘மண்டாடி’ பெற்றுள்ளது. மேலும், இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலிலும் இப்படம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
