ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் எனப்படும் ஏ.டி.ஆர் (ADR) அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, இந்திய அரசியல் கட்சிகளின் நிதி விவகாரங்கள் குறித்துப் பல அதிரடித் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 2024-25 நிதியாண்டில், இந்தியாவில் உள்ள மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் சுமார் 347 கோடி ரூபாயாக இருந்த இந்த நன்கொடைத் தொகை, நடப்பு ஆண்டில் 1,051 கோடி ரூபாயாக எகிறியுள்ளது.
இந்த அதீத வளர்ச்சி, மாநிலக் கட்சிகளின் பண பலம் மற்றும் தேர்தல்களுக்கான தயார் நிலையைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த நன்கொடைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக (DMK) முதலிடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் திமுக சுமார் 365.78 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மொத்தத் தொகையில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், யார் என்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களிடமிருந்து வந்துள்ளதாக ஏ.டி.ஆர் அறிக்கை குறிப்பிடுகிறது. இது அரசியல் தளத்தில் வெளிப்படைத்தன்மை குறித்த புதிய விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.
திமுகவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 184 கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்திலும், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 140 கோடி ரூபாயுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
கடந்த காலங்களில் முன்னிலையில் இருந்த தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, ஆளும் மாநிலக் கட்சிகள் தங்களின் நிதி வலிமையை நிரூபித்துள்ளன.
அதேபோல், அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றுள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
மாநிலக் கட்சிகள் தங்களின் தேர்தல் செலவுகளுக்காகப் பெரும் நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களைச் சார்ந்திருப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடை 227 கோடியிலிருந்து 644 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதில் ‘புருடென்ட் எலக்டோரல் டிரஸ்ட்’ (Prudent Electoral Trust) என்ற அமைப்பு மட்டுமே சுமார் 434 கோடி ரூபாயை பல்வேறு கட்சிகளுக்கு வழங்கிய மிகப்பெரிய கொடையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேர்தல்களில் பணத்தின் ஆதிக்கம் அதிகரிப்பதும், மர்ம நபர்களின் நிதிப் பங்களிப்பும் ஜனநாயகத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இப்போது சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.
