ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களை பெறுவதற்கு, விஜய்யின் தவெக கட்சி பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் அளித்துள்ள குற்றச்சாட்டு மொத்த அரசியல் களத்தையும் புரட்டி போட்டுள்ளது.
மன்னார்குடி தொகுதியின் அமமுக எம்எல்ஏ காமராஜின் பெயரை கொண்ட போலியான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாக, தவெக மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதையடுத்து காமராஜ் எம்எல்ஏ காரில் அமர்ந்தபடி கையெழுத்து போடும் வீடியோவை தவெக தரப்பு வெளியிட்டது.
பதிலுக்கு தினகரன், ”தவெகவுக்கு அமமுக எம்எல்ஏ ஆதரவு என்றால் ஒரிஜினல் கடிதத்தை வெளியிட வேண்டியது தானே? அமமுக எம்எல்ஏ காமராஜ் கையெழுத்திடுவது போன்ற வீடியோவை எடுத்தது யார்? விஜய்யா? ஆனந்தா? செங்கோட்டையனா? தவெக வெளியிட்ட வீடியோ உண்மை கிடையாது. அது AI வீடியோவாக இருக்கலாம். காமராஜ் ஆதரவு அளித்தது உண்மை என்றால் வீடியோ மற்றும் கடிதத்தின் ஒரிஜினலை தவெக வெளியிடட்டும்,” என்று சவால் விடுத்திருக்கிறார்.
இதனால் விசிக கட்சி விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு அளித்தாலும் கூட, அதிலும் குதிரை பேரம் நடந்திருக்குமோ என்று ஆளுநர் சந்தேகப்பட்டு விசாரணை செய்ய கால அவகாசம் எடுத்துக்கொள்ளவும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் தவெக கட்சியே வழிவகை செய்து கொடுத்துள்ளதாக, விமர்சனம் எழுந்துள்ளது.
அமமுகவின் ஆதரவு இல்லாமலேயே தவெகவால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் இருந்த நிலையில், என்டிஏ கூட்டணிக் கட்சியை தவெக நாடியது ஏன்? கண்ணிவெடி என்று தெரிந்தும் தெரிந்தே பாஜக வலையில் சிக்கியதா தவெக? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.
