தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் நிபந்தனையின்றி ஆதரவு அளிக்க வேண்டும் என, தமிழக பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக மக்களின் மாபெரும் ஆதரவுடன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெற்றுள்ள நடிகர் விஜய், அரசியல்வாதியாக ஒரு சிறந்த நிர்வாகியாக செயல்பட குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசத்தை தமிழக அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும். அதன்பின் தவெக ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு ஏற்ப மக்கள் நலனுக்கு ஏற்ப முடிவு எடுத்து தமிழகத்தில் நாகரிக அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
தனிப்பெரும்பான்மை இல்லாமல் இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகத்தின் 108 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்த தமிழக மக்களின் எண்ணத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில், தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும், எம்எல்ஏக்களை விலை பேசும் அரசியல் குதிரை பேரத்திற்கு தமிழக அரசியலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தான் என்று மக்கள் முடிவு எடுத்த நிலையில், முக்கியமான சூழ்நிலையில் தமிழக வெற்றி கழகத்தை நடிகர் விஜய் துவக்கினார். நடிகர் விஜய்யை பாஜக வாழ்த்தி வரவேற்றது. பாதுகாத்தது. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திலும் பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும், பாவ மூட்டைகளும் நடிகர் விஜய் மேல் சுமத்தப்பட்ட பொழுது பாஜக நடுநிலையோடு செயல்பட்டு விஜய்யின் அரசியலுக்கு அரணாக நின்றது. நீதிமன்ற தீர்ப்பின்படி சிபிஐ விசாரணை நடு நிலைமையோடு நடைபெறுகிறது.
இந்த மகத்தான சூழ்நிலையை உருவாக்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தின் ஜனநாயகத் தூணாக வருங்காலத்தில் போற்றப்படும் வகையில் ஒரு நேர்மறை அரசியலுக்கு வித்திட்டு உள்ளார். எனவே தமிழக மக்களின் தீர்ப்பை ஏற்று முதல் கட்டமாக ஒரு ஆறு மாத காலத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் எந்தவித அழுத்தமும் நிபந்தனையும் இன்றி ஆதரவளிக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
