இந்தியாவுடனான உறவை அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் புறக்கணித்துள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம் தான் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
அதாவது, பாகிஸ்தானில் தனது குடும்பத்தின் வணிகத்தை அதிபர் டிரம்ப் மேம்படுத்துவதற்காக இந்தியாவுடனான உறவை பலி கொடுத்துவிட்டதாக கூறி பெரிய புயலை கிளப்பிவிட்டுள்ளார் ஜேக். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஜேக், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்க நெடுங்காலமாக முயற்சி செய்து வருவதாக கூறியிருந்தார். மேலும், இந்தியாவுடனான தொழில்நுட்பம், திறமை, பொருளாதாரம் போன்றவற்றில் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இது கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது குடும்பத்துடன் வணிகத்தில் ஈடுபட பாகிஸ்தான் தயாராக இருப்பதால், அதிபர் டிரம்ப் இந்தியாவுடனான நட்பை பலியாக்கிவிட்டதாக கூறியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாமல் இந்தியாவுடனான உறவை டிரம்ப் சீரழித்துவிட்டார் என்றும் இது அவரது வெளியுறவு கொள்கைக்கு விழுந்த பெரும் பின்னடைவு என்றும் கூறியிருப்பது தற்போது சர்வதேச அரங்கில் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.