தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து, சென்னை நகரில் நடைபெற்ற விழா உற்சாகமான சூழலில் நிறைவடைந்தது. தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்த பின்னர், விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜயை உற்சாகக் குரலுடன் வரவேற்றனர்.
பதவியேற்பு விழா முடிவடைந்து ஆளுநர் புறப்பட்டுச் சென்றதும், இதுவரை இல்லாத வகையில் மேடையிலேயே முதலமைச்சர் விஜய் தனது முதல் அதிகாரப்பூர்வ கையெழுத்தை பதிவு செய்தார். இந்த நிகழ்வு விழாவில் கலந்து கொண்டவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் பல முக்கிய அறிவிப்புகள் தொடர்பான கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
அதில் முக்கியமாக, இரண்டு மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக “சிங்கப்பெண்” என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கும் திட்டத்திலும் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்த தனி போதைப்பொருள் தடுப்பு படையை உருவாக்கும் கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார். பதவியேற்ற உடனேயே மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்திய விஜயின் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
