விஜய்யின் CM கனவை நிஜமாக்கிய ‘Route’ – யார் ‘இந்த’ ஜெகதீஷ் பழனிசாமி?

சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக விஜய்யின் பிராண்ட் மதிப்பை உயர்த்தியதில் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் ராஜ்ஜியம் வரை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் அவரது ‘தி ரூட்’ (The Route) நிறுவனம் ஆற்றிய பங்கு தற்போது மற்ற அரசியல் கட்சிகளின் பார்வையை ஒட்டுமொத்தமாக திருப்பியிருக்கிறது. இதையடுத்து ஜெகதீஷ் குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரித்து இருக்கின்றன.

சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 108 இடங்களை கைப்பற்றி, மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் விஜய். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது The Route நிறுவனமும், ஜெகதீஷ் பழனிசாமியும் தான். திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் களத்தில் கடும் உழைப்பை கொட்டி சந்தித்த தேர்தலை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் வழியாக விஜய் மிக எளிதாக சாதித்து விட்டார்.

துரதிருஷ்டவசமாக களப் பணியில் கவனம் செலுத்திய பெரிய கட்சிகள், ஆன்லைனில் கவனம் செலுத்த தவறிவிட்டன. இதன் காரணமாகத்தான் இவ்வளவு ஆண்டுகளும் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்ட ஜெகதீஷின் பெயர் சமீபகாலமாக பொதுவெளியில் அடிபடத் தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் ஜெகதீஷின் பின்னணி குறித்து இங்கே பார்க்கலாம்.

கோவையைச் சேர்ந்த ஜெகதீஷ் பிஎஸ்ஜி கல்லூரியில் இன்ஜினீயரிங் முடித்தவர். சோஷியல் மீடியாவில் குறிப்பாக ட்விட்டரில் அதிக ஈடுபாடு கொண்ட ஜெகதீஷ், சோஷியல் மீடியா புரமோஷன் வேலைகள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார். சோஷியல் மீடியா மூலமாகவே இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமாருடன் நட்பானார் ஜெகதீஷ். இருவரும் நல்ல நண்பர்களானதோடு ஜி.வி.பிரகாஷின் மேனேஜராகவும் மாறினார். இதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு உயர ஆரம்பித்தார் ஜெகதீஷ்.

2013-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்துக்கு இசையமைத்தார் ஜி.வி.பிரகாஷ். இந்த நேரத்தில் முருகதாஸ், அட்லி என இருவரின் நட்புமே ஜெகதீஷ்க்கு கிடைத்தது. இதேநேரத்தில் நடிகர் விஜய்யின் `தலைவா’ படத்துக்கும் இசையமைப்பாளர் ஆனார் ஜி.வி. அப்போதுதான் நடிகர் விஜய்யுடன் பேசிப்பழகும் வாய்ப்பு ஜெகதீஷ்க்கு கிடைத்தது.

தலைவா' நேரத்தில், போட்டி நடிகர்களுடன் ஒப்பிடும்போது தன்னுடையே இமேஜ் தொடர்ந்து ட்விட்டரில் டேமேஜ் ஆக்கப்படுவதை மிகவும் வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த விஜய், இதுகுறித்து ஒரு மீட்டிங்கில் சொல்ல அப்போதுதான் ஜெகதீஷ் உள்ளே வந்திருக்கிறார்.

2013-ம் ஆண்டுதலைவா’ படம் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே ட்விட்டரில் ActorVijay என்கிற பெயரில் விஜய்க்கென தனிப்பக்கம் ஆரம்பித்தார் ஜெகதீஷ். விஜய்க்கென சோஷியல் மீடியாவில் ஒரு டீமை உருவாக்கி வேலை செய்ய ஆரம்பித்தார் ஜெகதீஷ். ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து நடிகர் விஜய்யை ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வைத்தார்.

`என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு ரசிகர்களுக்கு’ என விஜய் ட்விட்டரில் சொல்லும் பதில்கள் எல்லாம் டிரெண்டாக ஆரம்பித்தன. தொடர்ந்து விஜய் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள், மற்ற நடிகர்களுடனான செஃல்பிகள் என இந்தப் பக்கத்தை ஆக்டிவாகவே வைத்திருந்து ட்விட்டரில் விஜய்க்கான தனி ரசிகர்கூட்டத்தைக் கூட்டும் முயற்சிகளில் வெற்றிகண்டது ஜெகதீஷ் அண்ட் டீம். போட்டி நடிகர்களுக்கு இணையாக ட்விட்டரில் விஜய்க்கும் ஆதரவு அதிகரித்தது. இதில் இம்ப்ரஸ் ஆன விஜய், ஜெகதீஷை நிரந்தரமாகத் தன்னுடைய டீமில் இணைத்துக்கொண்டார்.

இப்படி 2013ல் ஆரம்பித்த விஜய் – ஜெகதீஷ் நட்பு 2026ம் ஆண்டிலும் தொடர்கிறது. சமூக வலைதளங்களின் மூலமாக பெரிய கட்சிகளை வீழ்த்தி விஜய்யின் முதல்வர் ஆசையை, வெறும் இரண்டே வருடங்களில் ஜெகதீஷ் பழனிசாமி சாத்தியமாக்கி காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News