தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு ஓட்டு என்பது எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்குச் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதி ஒரு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் 83,364 வாக்குகளைப் பெற்றிருந்தார். வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கைநழுவிய நிலையில், இந்தத் தேர்தல் முடிவை எதிர்த்துப் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அவசர மனு, தற்போது தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகருப்பன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது, சிவகங்கை மாவட்டத் திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் வாக்குகள், தவறுதலாகத் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அவை சரியான நேரத்தில் கணக்கில் சேர்க்கப்படாததால் தேர்தல் முடிவு பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த வாக்குகளை மீட்டு மீண்டும் எண்ணினால் முடிவுகள் மாறக்கூடும் என்றும், அதுவரை தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் விக்டோரியா கௌரி மற்றும் செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். திமுக தரப்பில் ஆஜரான முகுல் ரோஹ்தகி, தவறாக அனுப்பப்பட்ட தபால் வாக்குகளால் ஒரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பறிபோயுள்ளதாக வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தபால் வாக்குகள் தவறுதலாக வேறு தொகுதிக்குச் சென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துச் சட்டத்தில் தெளிவான விதிகள் இல்லை என்ற ஒரு பகீர் தகவலை வெளியிட்டார். அதேசமயம் தவெக வேட்பாளர் சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, தேர்தல் முடிவை எதிர்த்துத் தேர்தல் மனு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும், எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றுவதைத் தடுக்க முடியாது என்றும் வாதிட்டார்.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஒரே ஒரு வாக்காக இருந்தாலும் அது ஜனநாயகத்தில் மிக முக்கியமானது, இதற்குப் பதிலளிக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு” என்று கூறி, விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி இன்று எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க இருக்கும் சூழலில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெற உள்ளது.
ஒருவேளை நீதிமன்றத்தின் முடிவு பெரியகருப்பனுக்குச் சாதகமாக அமைந்தால், அது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் துடிக்கும் விஜய் தரப்பிற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இப்போது உயர்நீதிமன்றத்தை நோக்கித் திரும்பியுள்ளது.
