தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக நடிகர் விஜய் பதவியேற்றுள்ளார். கடந்த சில நாட்களாக நொடிக்கு நொடி நீடித்த அரசியல் பரபரப்புகளுக்குப் பிறகு, 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைத் தகர்த்து புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
2024-ல் கட்சி தொடங்கி, வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விஜய் சாதனை படைத்திருந்தாலும், இந்த வெற்றி அவருக்கு மலர்ப்பாதையாக அமையவில்லை. படத் தணிக்கை சிக்கல்கள், சிபிஐ விசாரணை, தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனங்கள் எனப் பல நெருக்கடிகளைத் தாண்டித்தான் முதல்வர் நாற்காலியை அவர் எட்டியுள்ளார். 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்க்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு ஒரு வழியாகக் கிடைத்திருப்பது அவரது முதல் கட்ட வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பதவிப் பிரமாணம் ஏற்ற இந்தத் தருணத்தில் முதல்வர் விஜய்க்கு முன்னால் இமாலயச் சவால்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதில் முதலாவது மற்றும் மிக முக்கியமானது தமிழகத்தின் நிதி நெருக்கடி. தற்போது மாநில அரசின் கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என்ற அதிரவைக்கும் அளவில் உள்ளது. முந்தைய ஆட்சிக் காலங்களில் வாங்கப்பட்ட இந்தக் கடன் சுமையைத் தற்போது விஜய் அரசுதான் சுமக்க வேண்டும்.
தமிழகத்தின் ஆண்டு வருமானம் சுமார் மூன்றரை லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், ஊழியர் ஊதியம் மற்றும் வட்டி எனச் செலவினங்களோ 5 லட்சம் கோடியைத் தாண்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதலாகக் கடன் வாங்க வேண்டிய நெருக்கடியில் தமிழகம் சிக்கியுள்ள நிலையில், விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் இந்த நிதிச் சுமையை எப்படிக் கையாளப் போகின்றன என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் உரிமைத் தொகை, திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் என விஜய் அறிவித்துள்ள மெகா திட்டங்களைச் செயல்படுத்த மட்டும் ஆண்டுக்குச் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாகத் தேவைப்படும். இதற்கான நிதி ஆதாரத்தை அவர் எங்கிருந்து திரட்டப் போகிறார் என்பதுதான் அவர் முன்னால் இருக்கும் முதல் சவால்.
அதுமட்டுமின்றி, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இருபெரும் அரசியல் ஜாம்பவான்களின் விமர்சனக் கணைகளை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதும், மத்திய பா.ஜ.க அரசுடன் இணக்கமான உறவைப் பேணி மாநிலத்திற்கான நிதிப் பங்கீட்டை எப்படிக் கேட்டுப் பெறப் போகிறார் என்பதும் அடுத்தடுத்த சவால்களாக உருவெடுத்துள்ளன.
இறுதியாக, வெற்றி பெற்றுள்ள 108 எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானோர் அரசியலுக்கு முற்றிலும் புதியவர்கள். விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்களித்திருக்கும் சூழலில், அனுபவமில்லாத புதிய அமைச்சர்களைக் கொண்டு நிர்வாகத்தை எவ்விதப் புகாருமின்றி நடத்துவது விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவே இருக்கும்.
உடனடித் தீர்வாகச் சட்டம் – ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், மக்கள் அரசு சேவைகளை எளிதாகப் பெறும் வகையில் நிர்வாகத்தைச் சீரமைப்பதும் விஜய்யின் நன்மதிப்பை உயர்த்த உதவும். திரையில் சவால்களைச் சமாளிக்கும் நாயகனாக வலம் வந்த விஜய், நிஜ வாழ்க்கையில் இந்த அரசியல் சவால்களைச் சாதனைகளாக மாற்றுவாரா என்பதை ஒட்டுமொத்தத் தமிழகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
