குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தவெக சரமாரி கேள்வி!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக தவெக அரசுக்கும் திமுகவுக்கும் இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, செஞ்சியில் மாயமான சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாத சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெக ஐடி விங் அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் காணாமல் போன குழந்தைகள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், 2016 முதல் 2020 வரை 22,209 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 37,705 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025-ல் மட்டும் 8,439 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், 2026 செப்டம்பர் 30 நிலவரப்படி, கடந்த பத்து ஆண்டுகளில் காணாமல் போன 742 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கொலை வழக்குகளின் மாத சராசரி 131.9-லிருந்து 128.5 ஆகக் குறைந்துள்ளதாகவும், கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 3,070 பேரில் 2,935 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ரவுடிகள் தொடர்பான கொலைகளும் 12-லிருந்து 7 ஆகக் குறைந்துள்ளதாகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு முழுமையான தலைமைத்துவம் வழங்காமல், டிஜிபியைக்கூட உரிய முறையில் நியமிக்காத திமுகவுக்கு சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சிக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்றும் தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.

Related News

Latest News