Mandamus-ஐ கையில் எடுக்கும் விஜய்! இனி தான் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்!

தமிழக அரசியல் சூழல் தற்போது பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ‘தவெக’ தலைவர் விஜய், ஆட்சி அமைக்கும் உரிமை தொடர்பான விவகாரத்தை சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு முறை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்-ஐ சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரினார்.

இதற்கிடையே தற்போது அவர் டெல்லி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. த.வெ.க 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் மொத்தம் 112 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக விஜய் தரப்பு கூறுகிறது.

பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவைப்பட்டாலும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் முதலில் தங்களுக்கே ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் முக்கிய வாதமாக இருக்கிறது. ஆளுநர் தொடர்ந்து முடிவு எடுக்க தாமதித்தால், அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நடைமுறைக்கு முரணானதாக கருதி, நீதிமன்றத்தில் ‘Mandamus (man•day•muhs)’ மனு தாக்கல் செய்யும் வாய்ப்பும் பரிசீலனையில் உள்ளது.


Mandamus (man•day•muhs) மனு என்பது ஒரு அரசு அதிகாரியோ அல்லது ஆளுநர் போன்ற அரசியலமைப்புப் பதவியில் இருப்பவர், தனது சட்டபூர்வமான கடமையைச் செய்யாத பட்சத்தில், அந்தப் பணியை உடனடியாகச் செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பிக்கும் “செயலுறுத்தும் பேராணை” யே. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 226-ன் கீழ் உயர்நீதிமன்றத்திலோ அல்லது பிரிவு 32-ன் கீழ் உச்சநீதிமன்றத்திலோ இந்த மனுவைத் தாக்கல் செய்யலாம்.

இப்போதைய சூழலில், பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருக்கும் ஒருவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் கடத்தினால், அவர் தனது கடமையிலிருந்து தவறுவதாகக் கருதி, அவரைச் செயல்பட கோரி விஜய் தரப்பு இந்த மனுவைப் பயன்படுத்த முடியும்.


மேலும், 1994ம் ஆண்டு வழங்கப்பட்ட S. R. Bommai v. Union of India என்ற வழக்குத் தீர்ப்பை முக்கிய சட்ட ஆதாரமாக முன்வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பான்மை சோதனை ஆளுநர் மாளிகையில் அல்ல, சட்டமன்ற தளத்தில்தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, விரைவில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News