கலைஞருக்குப் பின்னால் நின்ற சிறுவன்… திமுகவை வீழ்த்திய விஜய்! – வைரல் போட்டோ!

காலத்தின் சக்கரம் யாரை எங்கே வைக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு இந்த ஒரு புகைப்படமே சாட்சி. ஒரு சின்னஞ்சிறு சிறுவன், மிகவும் அமைதியாக, தமிழகத்தின் அரசியல் ஜாம்பவான் கலைஞர் கருணாநிதிக்கு பின்னால் நின்று கொண்டிருக்கிறான். ஒரு சாதாரண ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சி அது. அப்போது அங்கிருந்த யாருமே நினைத்திருக்க மாட்டார்கள், கலைஞர் பின்னால் நின்ற அந்தச் சிறுவன் தான், ஒருநாள் அவர் கட்டிக்காத்த அரசியல் சாம்ராஜ்யத்தையே வீழ்த்திப் பிடிப்பான் என்று.

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம் தான் இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “கலைஞர் பின்னால் நின்ற இந்தச் சிறுவன் தான், ஒருநாள் அவர் உருவாக்கிய கட்சியையே சிதறடிப்பான் என்று கலைஞர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்” என்கிற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்தப் புகைப்படம், சில மணி நேரங்களிலேயே மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழக அரசியலில் இது வெறும் புகைப்படமல்ல, ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம். ஐந்து தசாப்தங்களாக திமுக-வை வழிநடத்திய கருணாநிதியின் வாரிசான மு.க.ஸ்டாலினை, அதே சிறுவன் இன்று தனது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் அரியாசனத்தில் இருந்து இறக்கியிருக்கிறார். 2021-ல் 159 இடங்களைப் பிடித்து அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஸ்டாலினின் திமுக, இன்று 59 இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால், முதலமைச்சர் ஸ்டாலினே தனது கோட்டையான கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியிருப்பதுதான்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு மூத்த இயக்குனர் என்பதால், சினிமா மற்றும் அரசியலின் சங்கமமாக இருந்த கலைஞரின் நிகழ்ச்சிகளில் சிறுவயது விஜய் கலந்து கொள்வது அப்போது சாதாரணமாக இருந்தது. ஆனால், அதே சினிமா வெளிச்சத்தில் வளர்ந்து, இன்று தனது முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளைக் கைப்பற்றி, சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஒரு கட்சியின் மிக வலுவான அறிமுகமாகத் திகழ்வது விஜய்யின் அசாத்திய அரசியல் வளர்ச்சியையே காட்டுகிறது.

திரையில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர், இன்று நிஜ வாழ்க்கையிலும் ஒரு மிகப்பெரிய ‘கிளைமேக்ஸ்’ மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். கலைஞரின் பின்னால் நிழலாக நின்ற அந்தச் சிறுவன், இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனது பின்னால் அணிவகுக்கச் செய்திருக்கிறான். ஒரு சகாப்தம் முடிந்து, புதிய வரலாறு தொடங்கியிருப்பதை இந்தப் புகைப்படம் மௌனமாகப் பறைசாற்றுகிறது.

Related News

Latest News