+2 ‘Result’ வந்தாச்சு! இதுல ஒரு ‘certificate’ மிஸ் ஆனாலும்..உங்களுக்கு ‘college’ ல சீட் கிடைக்காது!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் இப்போது தங்களது கல்லூரி கனவுகளோடு அடுத்தகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விரைவில் தொடங்கவிருப்பதால், கடைசி நேரப் பதற்றத்தையும் குழப்பத்தையும் தவிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சில முக்கியமான ஆவணங்களைத் தற்போதே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

முதலில், மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் வண்ணப் புகைப்படங்கள் மற்றும் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில் உங்கள் மின்னஞ்சல் அல்லது கூகுள் டிரைவ் போன்ற பாதுகாப்பான இடங்களில் சேமித்து வைப்பது ஆன்லைன் விண்ணப்பங்களின் போது உங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

கல்வி உதவித்தொகை மற்றும் இதர சலுகைகளைப் பெறுவதற்கு மாணவர்களின் பெயரில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு இருப்பது கட்டாயம். இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். இதற்குப் பான் கார்டு தேவைப்படும் என்பதால், அதற்கும் இப்போதே விண்ணப்பிப்பது நல்லது.

அதேபோல், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை தற்போது ‘கியூஆர்’ குறியீடுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலேயே வழங்கப்படுகின்றன. உங்கள் பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல் வடிவில் இல்லை என்றால், உடனடியாக ஈ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக, உங்கள் குடும்பத்தில் நீங்கள் தான் முதல் பட்டதாரி என்றால், ‘முதல் தலைமுறை பட்டதாரி’ சான்றிதழைப் பெறத் தவறாதீர்கள்; இது உங்கள் கல்லூரி கட்டணத்தில் பெரும் சலுகையை பெற்றுத்தரும்.

மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ள மாணவர்கள், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்து தயாராக வைத்திருக்க வேண்டும். இவர்களுக்குப் பெற்றோர்களின் சாதிச் சான்றிதழும் தேவைப்படலாம் என்பதால் அதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். மேலும், குடும்ப அட்டையில் மாணவர்களின் பெயர் விடுபட்டிருந்தால் அதனை இப்போதே சரிசெய்ய வேண்டும்.

மிக முக்கியமாக, மாணவரின் பெயர், இனிஷியல், பிறந்த தேதி மற்றும் முகவரி ஆகியவை ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பள்ளிச் சான்றிதழ்கள் என அனைத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். எழுத்துப் பிழைகள் இருந்தால் அதனை இப்போதே திருத்திக்கொள்வது சேர்க்கையின் போது ஏற்படும் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

இறுதியாக, உங்கள் பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் என அனைத்து ஆவணங்களையும் குறைந்தது 10 நகல்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தற்போது பெரும்பாலான கல்லூரிகளில் சேர்க்கை ஆன்லைன் மூலமாகவே நடைபெறுவதால், எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன என்பதை இணையதளங்கள் வாயிலாக இப்போதே ஆராயத் தொடங்குங்கள்.

சரியான திட்டமிடலும், முறையான ஆவணங்களும் இருந்தால் மட்டுமே விருப்பமான கல்லூரியில் தடையின்றி இடம் பெற முடியும். எனவே, முடிவுகள் வந்துவிட்ட இந்தத் தருணத்தில் ஆவணங்களைச் சீரமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

Related News

Latest News