தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்களை அவதிப்படுத்தி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் 13 இடங்களில் கடும் வெயில் நிலவியது. அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. அரியலூர் 104, வேலூர் 103, ஈரோடு 102, மதுரை 101 டிகிரி என உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் 100 டிகிரியை எட்டியதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல தயக்கம் காட்டுகின்றனர். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், சில பகுதிகளில் கோடை மழை பெய்ததால் தற்காலிகமாக வெப்பம் குறைந்து சற்றே குளிர்ச்சி நிலவியது. வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
மே 1ஆம் தேதி மற்றும் அதன்பிறகும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39°C மற்றும் குறைந்தபட்சம் 28°C இருக்கும். அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
