இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வட தமிழகத்தின் சில இடங்களிலும், மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்று தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென மழை பெய்தது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம் மற்றும் அண்ணா சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பம் இந்த மழையால் தணிந்து, நகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
