குறைந்த விலையில் வீடுகள் கிடைக்காதா என்று பலர் தவித்துக்கொண்டிருக்க, குறைந்த விலையில் உள்ள வீடுகளின் விற்பனை குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வுசெய்த ப்ராப் டைகர் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் பல உண்மைகள் தெரியவந்துள்ளன.
45 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகளின் விற்பனை 2021 ஆம் ஆண்டில் 5 சதவிகிதம் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் 48 சதவிகிதமாக இருந்த குறைந்த விலை வீடுகளின் விற்பனை 2021 ஆம் ஆண்டில் 43 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
அதேநேரத்தில் விலை அதிகமான வீடுகளின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதாவது, 75 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் விற்பனை 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 25 சதவிகிதத்திலிருந்து இந்த விலைகொண்ட வீடுகளின் விற்பனை 31 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, தில்லி, என்சிஆர், எம்எம்ஆர், புனே, அகமதாபாத் ஆகிய பெருநகரங்களில் வீடுகளின் விற்பனை 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
45 லட்சத்திலிருந்து 70 லட்ச ரூபாய் வரையிலான வீடுகளின் விற்பனை ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2020 ஆம் ஆண்டில் 26 சதவிகிதமாக இருந்த இப்பிரிவிலான வீடுகளின் விற்பனை 2021 ஆம் ஆண்டில் 27 சதவிகிதமாக அதிகரித்தது.
75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான வீடுகளின் விற்பனை 9 சதவிகிதத்திலிருந்து 11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
1 கோடிக்கும் அதிகமான விலைகொண்ட வீடுகளின் விற்பனை 16 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.