கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் அளவை ரூ.16,100 கோடியாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது குறித்து அரசு தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கூட்டுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இதற்கான விரிவான திட்டங்களை வகுத்துள்ளனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற விவசாயம் சார்ந்த பகுதிகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து இந்தக் கடன்கள் வழங்கப்பட உள்ளன. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர்க்கடன் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதால், விவசாயிகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்
இந்த ரூ.16,100 கோடி இலக்கில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான விவசாயிகளை உள்ளடக்க அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, புதிய உறுப்பினர்களாகச் சேரும் விவசாயிகளுக்கும், இதுவரை கடன் வசதி பெறாதவர்களுக்கும் உடனடி கடன் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
மேலும், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலுக்கான கடன்களும் இதில் உள்ளடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS) மூலம் இந்த நிதி விநியோகம் கிராமப்புற அளவில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்து, எவ்வித தாமதமுமின்றி கடன்பெற ஏதுவாக ஆன்லைன் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன
இந்த மெகா கடன் வழங்கும் திட்டம், தேர்தல் சமயத்தில் விவசாயிகளின் வாக்குகளைக் கவர்வதற்கான ஒரு முக்கிய உத்தியாகப் பார்க்கப்பட்டாலும், பருவமழை மற்றும் சாகுபடி காலத்திற்கு இது மிகவும் தேவையான நிதி உதவியாக அமையும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையினால் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாய குடும்பங்கள் நேரடியாகப் பயனடைய உள்ளன
