மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த திரிணாமுல் காங்கிரசின் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 208 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இது மாநில அரசியலில் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
முதல்வர் மம்தா பானர்ஜி தனது சொந்த வலுவான கோட்டையாக கருதப்பட்ட பவானிபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது முக்கிய அதிர்ச்சியாகும். தேர்தல் எண்ணிக்கையில் 11-வது சுற்று வரை முன்னிலையில் இருந்த அவர், இறுதிக் கட்டத்தில் பின்னடைந்து தோல்வியடைந்தார். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை ஏற்பட்ட சரிவு கட்சிக்குள் கவலை ஏற்படுத்தியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கை வைத்திருந்த சிறுபான்மையினர் வாக்குகள் பிரிந்து சென்றது இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது 87 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டதும், ஆவணங்களை சமர்ப்பித்து மறுபரிசீலனைக்கு காத்திருந்த 34 லட்சம் பேர் வாக்களிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்தியதாக கருதப்படுகிறது.
குறிப்பாக, எஸ்ஐஆர் செயல்முறையின் கீழ் பவானிபூர் தொகுதியில் மட்டும் சுமார் 47,000 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனைத்து காரணிகளும் சேர்ந்து மம்தா தலைமையிலான அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.
