ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பாஜக அரசு அமைந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்த சூழலில், அங்குள்ள மாநில பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் உதவி நிர்வாக இன்ஜினியராக பணியாற்றி வரும் வைகுண்டநாத் என்பவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அடுத்தடுத்து புகார்கள் குவிந்தன. இந்த புகார்களின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை அறிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் களத்தில் இறங்கினர்
அப்போது வைகுண்டநாத்தின் வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் இருந்து மட்டும் கணக்கில் வராத ரூபாய் 2.40 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை எண்ணி முடிப்பதற்குள் அதிகாரிகளுக்கு தலைசுற்றல் வந்துவிட்டது.அது மட்டுமின்றி வைகுண்டநாத் பெயரில் 5 பிரம்மாண்ட அப்பார்ட்மென்ட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதில் 4 அடுக்குமாடி கட்டிடங்கள் தலைநகர் புவனேஸ்வரிலேயே கட்டப்பட்டுள்ளன. இவற்றின் இப்போதைய சந்தை மதிப்பு மட்டுமே 20 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது தவிர, புவனேஸ்வர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 வீட்டு மனைகளுக்கான சொத்து ஆவணங்களும் அதிகாரிகளிடம் சிக்கின. மேலும் 341 கிராம் தங்க நகைகள் மற்றும் 45 லட்சம் ரூபாய் வங்கி வைப்புத்தொகையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.கடந்த 1999ம் ஆண்டில் வெறும் 6,000 ரூபாய் மாத சம்பளத்தில் இளநிலை இன்ஜினியராக தான் வைகுண்டநாத் தனது அரசு பணியை ஆரம்பித்துள்ளார்.. அதன் பிறகு 2016ல் உதவி இன்ஜினியராகவும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உதவி நிர்வாக இன்ஜினியராகவும் அடுத்தடுத்து பதவி உயர்வுகளை பெற்றிருக்கிறார்..
தனது 20 ஆண்டுகால அரசுப் பணியில், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிதியையும், தன் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி, அவர் எப்படியெல்லாம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார் என்பது இந்த சோதனையின் மூலம் அம்பலமாகியுள்ளது.ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டிய ஒரு அரசு அதிகாரி, கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சம்பவம் ஒடிஷாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
