தமிழ்நாட்டில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதால், இன்று (ஆகஸ்ட் 8) பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் முதல் வடக்கு கடலோர கேரளா வரை தமிழகம் வழியாக பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. மேலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்திலும் இதுபோன்ற நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 27-28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்.
இதனிடையே, பல்வேறு கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
