ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் மார்ச் மாதம் முதல் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எல்பிஜி சப்ளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் , கேஸ் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. சாதாரண மக்களின் குடும்ப செலவு ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது.அதுமட்டுமில்லாமல் எண்ணெய் விலை உயர்வால் கையிருப்பில் இருக்கும் அமெரிக்கா டாலரும் குறைந்து வருகிறது
இந்நிலையில் கையிருப்பில் இருக்கும் டாலர் அளவு குறையாமல் இருக்கவும்,அதே வேளையில் டாலர் வரத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காக அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி விலக்கு அளித்து மத்திய அரசு முக்கிய கொள்கை மாற்றம் கொண்டு வந்துள்ளது.இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்து வருமானம் பார்க்கும் போது இரண்டு முக்கியமான வரிகளைச் செலுத்த வேண்டியிருந்தது.ஒன்று நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG -12.5% ) .அடுத்ததாக வட்டி மீதான வரி (Withholding Tax -20%) அரசு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு விதிக்கப்படும் வரி.
எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய பத்திரங்களில் செய்யும் முதலீட்டு வரி கிடையாது என்பதால் கையில் கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். எனவே முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்வார்கள். இதனால் அமெரிக்க டாலர் வந்து குவியும். இவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக டாலரை கொண்டு வரும் போது இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்.பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடுகள் குறுகிய காலத்தில் வெளியேற வாய்ப்புள்ளது. ஆனால், அரசுப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகள் நீண்ட காலத்திற்குச் நிலையாக இருக்கும். இது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பாதுகாப்பைத் தரும். டாலர் வரத்து அதிகமாகும் போது நம் கைவசம் டாலர் சேமிப்பு அதிகமாகும். எனவே தடையின்றி நம்மால் கச்சா எண்ணெய் வாங்க முடியும். கச்சா எண்ணெய் தடையின்றி வாங்கினால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்
