இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பதினேழு வயது பள்ளி மாணவன், உலகிலேயே மிகச்சிறிய ரோபோடிக் கையை (Robotic Arm) உருவாக்கி கின்னஸ் உலக சாதனையில் (Guinness World Records) தனது பெயரைப் பதித்துப் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஹிதேந்திரா தார்புரே (Hiten Dharpure) என்ற இந்த இளம் மாணவன் உருவாக்கியுள்ள எலக்ட்ரோ மெக்கானிக்கல் ரோபோடிக் கையின் அளவு வெறும் முப்பத்தி ஒன்பது புள்ளி இரண்டு ஐந்து மில்லிமீட்டர் மட்டுமே. இதற்கு முன்பு நாற்பத்தி நான்கு புள்ளி நான்கு ஒன்பது மில்லிமீட்டர் அளவிலான ரோபோடிக் கையே உலக சாதனையாக இருந்தது. தற்போதைய கண்டுபிடிப்பானது அதைவிட ஐந்து புள்ளி இரண்டு நான்கு மில்லிமீட்டர் சிறியதாகும். மிக நுண்ணிய அளவில் இருந்தாலும், இந்த ரோபோடிக் கையால் சிறிய பொருட்களைத் துல்லியமாகப் பிடித்து தூக்க முடியும் என்பதுதான் இதன் அசாத்திய சிறப்பம்சம்.
இந்தக் குட்டி ரோபோடிக் கையை உருவாக்க எஃப்டிஎம் (FDM) அடிப்படையிலான முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தையும் (3D Printing Technology), மிகச்சிறிய மைக்ரோ செர்வோ மோட்டார்களையும் (Micro Servo Motors) ஹிதேந்திரா பயன்படுத்தியுள்ளார். மேலும், மூவச்சு இயக்கப் பாதை (3-Axis Motion Path) மற்றும் பிடபிள்யூஎம் (PWM – Pulse Width Modulation) சிக்னல்கள் மூலம் இந்த ரோபோடிக் கையின் அசைவுகள் மிகவும் துல்லியமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.
சிறுவயது முதலே பொம்மைகளை உடைத்து, அதன் உள்ளே இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் பாகங்களை ஆராய்ந்த ஹிதேந்திராவின் அதீத ஆர்வமே இந்த மாபெரும் சாதனைக்குக் அடித்தளமாக அமைந்துள்ளது.
தற்போது இது ஒரு ஆரம்பக்கட்ட முன்மாதிரியாக (Prototype) மட்டுமே இருந்தாலும், எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் நுணுக்கமான மைக்ரோ அறுவை சிகிச்சைகளுக்கு (Microsurgeries) மருத்துவர்களுக்கு உதவும் வகையில் இதனை மேம்படுத்துவதே தனது லட்சியம் என்று ஹிதேந்திரா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
