முகக் கவசம் அணிய புதிர் விளையாட்டு… போலீசின் புதுமையான செயல்

180
Advertisement

முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த புதிர் விளையாட்டைக் காவல்துறை பயன்படுத்தியது இணையத்தைக் கவர்ந்து வருகிறது.

மும்பைக் காவல்துறைதான் இந்தப் புதுமையான செயலில் ஈடுபட்டுள்ளது. இந்தச் செயலால் வேர்ட்லே என்னும் ஆன்லைன் புதிர் கேம் வைரலாகிவிட்டது. இந்தியாவில் ட்டுவிட்டரில் 96 சதவிகிதம்பேர் இந்த புதிரை விளையாடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த மும்பைக் காவல்துறை தனது ட்டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிர் விளையாட்டை உருவாக்கியது. அந்தப் புதிரின் வெவ்வேறு வரிசைகளில் காய்ச்சல், இருமல், வைரஸ், டெல்டா, அலைகள், முகக் கவசம் போன்ற சொற்கள் கிடைமட்டமாக உள்ளன.

அதில், முகக்கவசம் என்னும் சொல் மட்டும் பச்சை நிறத்தில் உள்ளது. முகக் கவசம் மேலே குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பை வழங்குகிறது என்பதைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது இந்தப் புதிர்.

வேர்ட்லே என்னும் இந்தப் புதிர் விளையாட்டை நியூயார்க்கிலுள்ள புரூக்ளினைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்ஜினீயர் ஜோஸ் வார்டில் தனது நண்பருக்காக உருவாக்கினார். 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் அதனை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

இந்த விளையாட்டை விளையாடுவதற்கு இணையதளத்தில் பதிவுசெய்யவோ, எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யவோ தேவையில்லை என்பதால் சட்டென்று பிரபலமானது.

முகக் கவசத்தை அணிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதிர் போட்டியைப் பயன்படுத்திய மும்பைக் காவல்துறையின் புதுமையான முயற்சி சமூக ஊடகத்தில் பாராட்டுப் பெற்று வைரலாகி வருகிறது.