மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்தி வரும் தெற்கு ரயில்வே, அங்கிருந்து கூடுதல் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. சென்னை – கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில், இனி மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படும். அதேபோல் மதுரை ரயில், மங்களூர் ரயில், கண்ணூர் ரயில், ராமேஸ்வரம் ரயில் உள்பட 6 ரயில்கள் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைய போகிறது.
மேட்டுப்பாளையத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, உள்கட்டமைப்பு பணிகளைத் துரிதப்படுத்தி ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.
முக்கிய மாற்றங்கள் (ஆகஸ்ட் 2026 முதல் அமல்):
புதிய ரயில் அறிமுகம்:
மேட்டுப்பாளையம் – ராமேஸ்வரம்: போத்தனூர், பொள்ளாச்சி வழியாகத் தினசரி புதிய ரயில் இயக்கப்படும்.
வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு:
சென்னை – கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் (20643/44) அதிவிரைவு ரயில், இனி மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படும் (புதன்கிழமை தவிர).
கேரளா மற்றும் கர்நாடகா ரயில்கள் நீட்டிப்பு:
கோவையிலிருந்து மங்களூர் செல்லும் தினசரி ரயில் (22609/10).
கோவையிலிருந்து கண்ணூர் செல்லும் தினசரி ரயில் (16607/08).
கோவையிலிருந்து மங்களூர் செல்லும் மற்றொரு ரயில் (16323/24).
மதுரை ரயில் நீட்டிப்பு:
கோவை – மதுரை (16721/22) தினசரி ரயிலும் இனி மேட்டுப்பாளையத்திலிருந்தே புறப்படும்.
இந்த புதிய சேவைகளைத் தொடங்குவதற்காக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரங்கள் மற்றும் ‘லூப் லைன்’ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஜூலை 2026-க்குள் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே கூடுதல் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இந்த புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள் மேட்டுப்பாளையத்தின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கும்.
