‘இனி இதெல்லாம் கிடையாது..’ ஐபிஎல் வீரர்களுக்கு ‘பிசிசிஐ’ போட்ட அதிரடி தடை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, அதிரடியான சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபகாலமாக ஒரு சில சம்பவங்கள் அரங்கேறி வருவதை அடுத்து, அனைத்து 10 அணிகளுக்கும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா 8 பக்கங்கள் கொண்ட புதிய வழிகாட்டுதல் அறிக்கையை அனுப்பியுள்ளார்.

இந்த அறிக்கையில், குறிப்பாக வீரர்களுக்குக் குறிவைக்கப்படும் ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) எனப்படும் அழகான பெண்களை வைத்து வலைவிரிக்கும் ஆபத்துகள் குறித்து பிசிசிஐ மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஐபிஎல் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகளுக்குத் தகுந்த அனுமதியின்றி வெளியாட்கள் வந்து செல்வது பிசிசிஐ-யின் கவனத்திற்கு வந்துள்ளது. அணி மேலாளருக்குத் தெரியாமல் பல வீரர்கள் தங்களது நண்பர்களையோ அல்லது அறிமுகமில்லாத நபர்களையோ தங்களது தனிப்பட்ட அறைகளுக்குள் அனுமதிப்பது ஒழுக்க மீறலாகக் கருதப்படுகிறது.

இனிவரும் காலங்களில், உறவினர்களாக இருந்தாலும் சரி அல்லது நண்பர்களாக இருந்தாலும் சரி, அணி மேலாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் வீரர்களின் அறைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது. பார்வையாளர்களைச் சந்திக்க வேண்டுமென்றால் ஹோட்டல் வரவேற்பறை அல்லது பொதுவான இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இத்தகைய கட்டுப்பாடுகள் வீரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யவும், பாலியல் குற்றச்சாட்டுகள் போன்ற சட்டச் சிக்கல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் அவசியமாகிறது.

வீரர்கள் மட்டுமின்றி, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கும் பிசிசிஐ சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, உரிமையாளர்கள் மைதானத்தில் உள்ள டக்-அவுட் பகுதிக்குச் செல்வதோ, வீரர்களைக் கட்டிப்பிடிப்பதோ அல்லது நேரடித் தொடர்பில் ஈடுபடுவதோ பிசிசிஐ-யின் விதிகளுக்கு எதிரானது.

இத்தகைய செயல்கள் வீரர்களின் மனநிலையைப் பாதிப்பதோடு, ஆட்டத்தின் போக்கிலும் இடையூறு விளைவிக்கலாம் என்பதால், உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், டிரெஸ்ஸிங் ரூம் மற்றும் மைதான வளாகத்தில் மின்-சிகரெட் எனப்படும் ‘வேப்பிங்’ (Vaping) செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு இளம் வீரர் டிரெஸ்ஸிங் ரூமில் வேப்பிங் செய்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஐபிஎல் தொடரின் தரம் மற்றும் வீரர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, உலக அளவில் புகழ்பெற்ற இந்தத் தொடரில் வீரர்கள் தங்களை அறியாமலேயே தேவையற்ற சமூக விரோதக் கும்பல்களின் வலையில் சிக்கிவிடக்கூடாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.

இந்த விதிகளை மீறும் வீரர்கள் அல்லது அணி நிர்வாகங்கள் மீது மிகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த 8 பக்க அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த அதிரடி மாற்றங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Related News

Latest News