தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் அமர்வில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினார். ஆளுநர் பி.எஸ். அர்லேகர் வாசித்த உரை குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஆளுநர் உரை என்பது ஆளுங்கட்சியின் உரையாகவே இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 37 நிமிடங்கள் வாசிக்கப்பட்ட உரையில் 37 உச்சரிப்பு பிழைகள் இருந்தன. அதை கேட்கும்போது காதில் ஈட்டி பாய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்றார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட ஆளுநரை அவரது தமிழ் உச்சரிப்புக்காக விமர்சிப்பது சரியல்ல என்று கூறினார். மேலும், “தமிழை கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஆளுநருக்கு உள்ளது. நமது தலைவர்களின் பெயர்களை தவிர்க்காமல் வாசித்தது பாராட்டுக்குரியது. சட்டப்பேரவை நிகழ்வுகளை அவர் சிறப்பாக நடத்தினார். எனவே அவரை பாராட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரேமலதா, சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் மேஜைகளில் வைக்கப்படும் தண்ணீர் டம்ளர்களுக்கு பதிலாக குடிநீர் பாட்டில்கள் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை இருப்பதால் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “கண்ணாடி பாட்டில்களை வைத்தால் அதை தூக்கி எறிந்துவிடுவார்கள்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, “அவர் தனது சொந்த அனுபவத்தில் பேசுகிறார்” என்று கூறியதும் மீண்டும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
மேலும், சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உடல்நலப் பிரச்சினைகளை சந்திப்பதாக குறிப்பிட்ட பிரேமலதா, விருத்தாசலத்திற்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் அரசிடம் வலியுறுத்தினார்.
