தமிழகத்தின் 17-வது சட்டசபை கூட்டத்தொடர் இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், “தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன்” என்று புகழாரம் சூட்டினார். இந்த உரை சட்டசபையில் பெரும் கவனத்தை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மற்றும் பிரபு ஆகியோரும் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், அமைச்சராக உள்ள கீர்த்தனா மட்டும் இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் ஆணையத்திலிருந்து பெற்றுவந்திருக்காததால் அவர் பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 9 அமைச்சர்களில் 8 பேர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
