நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். கட்சியில் இருந்து விலகிய பலரும் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஞானசேகரன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : 2010- ல் நாம் தமிழர் கட்சியாகத் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, இன்றைய நாள் வரை, 16 ஆண்டு காலமாக எண்ணற்ற களப்பணிகளையும், கட்டமைப்பையும், நாம் தமிழர் கட்சிக்காக, இளமைக்காலம் முதல் அர்ப்பணிப்போடு செயலாற்றி உள்ளேன். சமீப காலமாக கட்சியின் போக்கில் பலப்பல மாற்றங்களும், கொள்கைக்கு முரணான காட்சிகளும் அரங்கேறி வருகிறது.
சாதியை ஒழிக்கும், ஜனநாயக அமைப்பாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று நினைத்தால், சாதியைத் திணிக்கும் சர்வாதிகார அமைப்பாக, சீமான் கொண்டு போகிறார். இந்தத் தவறுகளை சுட்டிக்காட்டி தலைமையில் உள்ளவர்களிடம் கேள்வி கேட்கும்போது, கேள்வி கேட்பவர்களை, கட்சியை விட்டு நீக்குவது அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் அமர்த்தி அமைதியாக்கிவிடுவது போன்ற, மோசமான செய்கைகளையே பார்க்க முடிகிறது.
நமது கொள்கைக்கு நேரெதிரான, சங்பரிவார் அமைப்புகளோடு கைகோர்த்துக்கொண்டு சங்கிகள் சூழ்ச்சிக்கு தமிழர்களை இறையாக்கிப் பிளவுபடுத்தும் உங்களோடு, என்னால் பயணம் செய்ய முடியாத காரணத்தால், மிகுந்த மனவேதனையுடன், நான் வகித்து வந்த மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுகிறேன். இதுநாள் வரை, உடன் பயணித்த உறவுகளுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.