துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…

தமிழ் திரையுலகில் கிராமிய கதைகளையும், இயல்பான மனித உணர்வுகளையும் திரையில் உயிர்ப்பித்த புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா காலமானது திரையுலகை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த அவருக்கு வயது 84.

பாரதிராஜாவின் மறைவு செய்தி வெளியானதும் திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல், சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு காட்ரோடு அருகே உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மக்கள் வருகை தந்து தங்களது இறுதி மரியாதையை செலுத்திய நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அணிவகுத்து வந்து அரசு மரியாதை செலுத்தினர். பின்னர் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

‘இயக்குநர் இமயம்’ எனப் போற்றப்பட்ட பாரதிராஜா, தமிழ் சினிமாவில் அழியாத முத்திரை பதித்தவர். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது படைப்புகளும், கலைப் பங்களிப்புகளும் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.

Related News

Latest News