ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படமான ‘தலைவர் 173’ தற்போது ‘தர்மன்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. பின்னர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இந்தத் திட்டத்தில் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் விலகியதைத் தொடர்ந்து, ‘டிராகன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தற்போது படத்தை இயக்குகிறார்.
படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டன. போஸ்டரை பார்க்கையில், ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக, அறுவை சிகிச்சை அறையைப் பின்னணியாகக் கொண்ட காட்சியில், ரஜினி கையில் கத்தியுடன் நிற்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “இது சாதாரண மருத்துவரின் கதை அல்ல. ‘தர்மன்’ என்ற மருத்துவரை மையமாகக் கொண்ட ஸ்டைலான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகிறது. கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ படம் ரசிகர்களுக்கு எப்படி பிடித்ததோ, அதேபோன்ற உணர்வை இந்தப் படமும் தரும்” என்று தெரிவித்தார். மேலும், படத்தில் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், தனது வழக்கமான நகைச்சுவை பாணியில், “நான் பேசினாலே பிரச்சினைதான். பேசவில்லை என்றால் ஏன் பேசவில்லை என்று கேட்பார்கள். பேசினால் ஏன் பேசினார் என்றும் விமர்சிப்பார்கள். யாருக்காவது நம்மை பிடிக்கவில்லை என்றால் நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. அதேபோல் பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பதும் தவறு. அதனால் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
ரஜினியின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
